Wednesday, June 27, 2007

வெண்மனியே தேசமாய்...

தொரட்டி
மூங்கில் கழி
உன் குறி நுழைத்து
என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்
விதர்பாவில் தொலைத்த உன் வீரத்தையா?

உன் விளைநிலத்தை
விதைகளை
தண்ணீரை
வன்புணர்ந்து திரியும்
மஹிகோ மான்சாண்டோக்கள்
உன் வீரத்தையும் வேட்டையாடுகிறார்கள்
விதர்பாவின் தெருக்களெங்கும்

என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்

உன்
சாதிய தினவுக்கு தீனி போடும்
கேடுகெட்ட அரசாங்கமோ
சிறப்புப் பொருளாதார மண்டலமெனும்
சிறைக்குள்
உன்னை சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும்போது
நீ என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்.

விரைத்தகுறி வளைத்து
உன் மலப்புழைக்குள் செருகி
'ஜெய்ஹிந்த்' பாரத் மாதாகி ஜே- என
போலி தேசிய முழக்கமிடும் ஆண்மகனே
நண்பன் யார் பகைவன் யார் எனத் தெரியாமல்
இருட்டில் பாயும் குருட்டுப் பூனையே
உன் வீரம் வெளிப்படும் களம்
என் சகோதரியின் யோனியென்று
யாருனக்கு போதித்தது?

'வெண்மணியே' தேசமாய்
விரிந்து நிற்கும் இப்பூமி
பற்றி எரிவதொன்றே தீர்வென்றால்
தீக்கங்குகள் பீறிட்டுக் கிளம்பும்
என் சகோதரியின் யோனிக்குள்ளிருந்து.

-ஜொஷிவா தமிழி
நெஞ்சை கனக்கச் செய்யும் கண்ணை சிவக்கச் செய்யும் கயர்லாஞ்சி படுகொலையை கண்டித்து எழுதப்பட்ட இந்த நெருப்புவரிகள் புது விசை எனும் பத்திரிக்கையில் தெறித்திருந்தவை..

நான் பிரகடனம் செய்கிறேன்

எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும் வரை
என்னிடம் ஒரு ஒலிவ்மரம் எஞ்சி இருக்கும் வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும் வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர்
எஞ்சி இருக்கும் வரை

அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல்-அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை

எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள் எனது கைகள்
எனது தண்ணுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்.

-மக்மூத் தார்வீஷ்
பாலஸ்தீனக் கவிதை

சாமி பெயருக்கு ஒரு அர்ச்சனை

எம்பெருமான் ஆலயத்தை
எழுத்துக் கூட்டிப் படித்து நுழையும் போதே
"தங்கள் பாத அணிகளை இங்கே விடவும்"
என்று படம் வரைந்து உவமையணியோடு
கால் வாங்குகிறது குத்தகைத் தமிழ்.

உள்ளே அடியெடுக்க
உடனே தட்டுப்படும் உண்டியலோ
தனித்தமிழில்.

இதோ "அர்ச்சனை சீட்டு வழங்குமிடம்"
நெம்பித்தள்ளூம் அம்புக்குறிக்குள்
நிர்வாகத்தமிழ்

"சாமி பிரசாதம் கிடைக்குமிடம்"
மடப்பள்ளியும், விலைப்பட்டியலும்
மணக்கும் தமிழில்

"அர்ச்சனை செய்து தங்களுக்கு
அஞ்சலிலேயே அனுப்பி வைக்கப்படும்
ஆகும் செலவு ஒரு நூறு"
சுண்டியிழுக்கும் விளம்பரமோ
சோடியம் தமிழில்.

"கோயில் திருப்பணிக்கு
அம்பாளின் அருள்பெற
நன்கொடை தருபவர்கள்
தாராளமாய் தரவேண்டிய முகவரி"
அடிக்கோடிட்டு அன்னைத் தமிழில்.

மெய்ப்பொருளை அடைய
மேலானது சமஸ்கிருதமென்றால்
எங்கள்
கைப்பொருளை பிடுங்க மட்டும்
கன்னித் தமிழைக் காட்டுவது
வெட்கமாயில்லையா
விளங்காத பரம்பொருளே!


தோழர் துரை. சண்முகம்
புதிய கலாச்சாரம்